Friday, May 21, 2010

எனது ரயில் பயணத்தின் அனுபவம்...
எனது தனியான முதல் பஸ் பயணம் எனது 10 அவது வயதில் தான் ஆரம்பித்தது அன்னிக்குதான் என்னோட சொந்த ஊருக்கு தனியா போனேன்.அதுவரை என்னுடைய அப்பா அல்லது அம்மா கூடதான் எங்க போனாலும் போவேன்.நான் முதல் முதல்ல தனியா பஸ்ல போறாப்போ ரொம்ப பயமா இருந்துச்சு ஆனாலும் தனிய போறோம் நாம பெரிய ஆளாயிட்டோம்னு ஒரு சந்தோசமும், பெருமையுமாய் இருந்துச்சு.ஏன்னா அந்த வயசுல பஸ்ல தனியாய் போறதே எனக்கு பெரிய விஷயமா தோனுச்சு.பஸ்சுகே இப்படினா ரயில் பத்தி சொல்லவே வேண்டாம் படத்துல பார்த்ததோட சரி.அதுவும் 'ஷோலே','கேப்டன் பிரபாகரன்' படத்துல தான் அதிகமா பார்த்திருக்கேன் நேர்ல பார்க்குறதுக்கான சந்தர்ப்பம் அப்போதைக்கு அமையல.

நானும் என் தம்பியும் சின்ன வயசுல லாரி, பஸ் எல்லாம் அதிகமா பார்த்திருந்ததனலேயோ என்னவோ தீபெட்டிய வெச்சு லாரி, பஸ் எல்லாம் செஞ்சு விளையாடுவோம் ஆனால் ரயில் மட்டும் செய்ய தெரியாது.இப்படியே எனது வாழ்க்கை +2 முடிக்கும் வரைக்கும் ரயில் பத்தின பிம்பத்தை மட்டும் சுமந்து கொண்டு போச்சு. எனது முதல் ரயில் பயணம் இன்ஜினியரிங் கவுன்செல்லிங்காக சென்னை வரை சென்றதுதான்.அதுவும் ஓசிப்பயணம் எனது நண்பனின் தாத்தா ரயில்வேல டிடிஆர் அதனால் தான் அந்த ஓசிப்பயணம், ஒசின்றதுனலையோ என்னவோ எங்க அப்பா ரயில்ல கூட்டிட்டு போனாரு.இல்லைனா அன்னிக்கு ரயில்ல போயிருக்கிறது சந்தேகம் தான்.

ரயில்ல ஏறி டிடிஆர்கான ச்லீபேர் பெர்த் மாதிரி இருந்த ஒண்ணுல நானும் என் அப்பாவும் உக்கார்ந்துகிட்டோம். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அந்த டிடிஆர் என் அப்பா ரெண்டு பேறும் எங்கயோ போய்ட்டாங்க.நான் அப்படியே சன்னல் ஓரமா உக்கார்ந்துகிட்டு வேடிக்கை பார்த்துகிட்டு வந்தேன்.ராஜா குதிரையில் ஊர்வலம் போறதை போல என் மனசுக்குள்ள ஒரு இருமாப்பு.ரயிலை விட ரெண்டு பக்கத்துல இருக்கிற மரங்களும், அப்பபோ வந்து போகும் மலை என்னை பார்த்து தலைவணங்கி பயந்து எதிர்புறமா வேகமா ஓடுதொனுகூட தோனுச்சு.பயணம் முழுவதும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாம திருவிழவ வேடிக்கை பார்க்கிற குழந்தை மாதிரி வேடிக்கை பார்த்துகிட்டே வந்தேன்.ஒரு சில நேரம் மட்டும் எதிர்ல ஒரு பொண்ணு இருந்தா எப்படி இருக்கும்னு கூட ஒரு எண்ணம் தோணினாலும் (இணைந்த கைகள் படத்துல கதாநாயகி கூட இருப்பாங்க இல்ல அது மாதிரி) ரயில் பயணத்தின் உற்சாகமே என்னை அதிகம் ஆக்கிரமிசுக்கிச்சு.அந்த பயணத்தின் பொது கழிப்பறைக்கு கூட போகலேன்னா பாருங்க.இப்படியாக எனது பயணம் அன்னிக்கு ராத்திரி 10 மணிக்கு முடிஞ்சு, டிடிஆர்கான அறையில் தங்கினோம். டிடிஆர்ம் எனது அப்பாவும் சரக்கு அடிக்க போயிட்டு எனக்கு ஒரு சில்லி வாங்கீட்டு வந்தாங்க அட பாவிங்கள! எனக்கு ஒரு பீர் வாங்கிட்டு வந்திருக்கலாமில்லன்னு கேட்கிறதுக்கு அவங்க என்ன என்னோட நண்பர்களா? அடுத்த நாள் கவுன்செல்லிங் நல்ல படியா முடிஞ்சு வீடு திரும்பினோம்.


அதற்கப்புறம் எனக்கு ரயிலுக்குமான சிநேகிதம் 5 வருஷம் விட்டு போச்சு.எப்போ சென்னைல நான் வேலைக்கு சேர்ந்தேனோ அப்போ இருந்து என்னோட ரயில் சிநேகம் நீடிக்க ஆரம்பிச்சுது. எனக்கு தெரிந்து எனக்கு திருமணம் ஆகும் வரை முன்பதிவு செய்து பயணித்ததே கிடையாது ஏனா என்னோட கம்பெனி அப்படி என்னோட நண்பர்களுக்கெல்லாம் பண்டிகைக்கான விடுமுறை எப்போது என்று முன்னமே தெரிச்சிருக்கும்.ஆனா எனக்கு அப்படி இல்ல என்னோட விடுமுறை ஒரு நாளைக்கு முன்னாடி தான் எனக்கே தெரிய வரும் அப்படி இருக்கிறப்போ எங்க முன்பதிவு செய்யறது.பொங்கல்னாலும் சரி தீபவளினாலும் சரி எப்பயுமே பதிவு செய்யப்படாத பெட்டிகளில் போறது தான் வழக்கம் ஆகிப்போனது. பண்டிகை சமயங்களில் பயணிப்பது என்பது கடலில் பெருங்காயத்தை போட்டு தேடுற மாதிரி. கடுகு மேல இருந்து கீழ விழுந்தாலும் அது ரயில் பெட்டியோட தரையை தொட 5 மணிநேரம் ஆகும் அவ்ளோ கூட்ட நெரிசல் இருக்கும்.அந்த நெரிசல்ல ஆயிரம் சண்டைகள் நடந்துகிட்டு இருக்கும்.

அந்த கூட்ட நெரிசலில் பயணிப்பது எனக்கு ஒரு வகையான சுகமான அனுபவத்தை கொடுக்க தான் செஞ்சுச்சு.அது எப்படி அவனவன் நிக்க கூட இடமில்ல உனக்கெப்படி ஒரு சுகமான அனுபவம்னு நீங்க கேட்கிறது எனக்கு புரிது.சீட்ல நாலு பேர் தாராளமா உட்காரலாம் பக்கத்துக்கு காபின்ல அஞ்சு பேர் உட்கார்ந்திருபாங்க அதை பார்த்து சீட் பக்கதுல நினிட்டு இருக்கும் ஒரு ஆள் "ஏங்க கொஞ்சம் தள்ளி உட்காருங்க பக்கதுல சீட்ல அஞ்சு பேர் உட்கார்ந்திகாங்க" நு சொல்வார்.அதுக்கு சீட்ல உட்கார்ந்திருப்பவர் "ஏங்க இதுல நாலு பேர் தான் உட்கார முடியும்ங்க பாருங்க மேல நம்பர் போட்ருக்காங்க" என்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும்.நின்னிட்டு இருக்கிற ஆளுக்கு பக்கதுல நிக்கிற ரெண்டு பேர் சாதகமா பேசுவாங்க.உட்கார்ந்திருபவருக்கு அவர் பக்கத்தில் உட்கர்ந்திருபவங்க சாதகமா பேசுவாங்க

இது ஒரு பக்கம் இருக்க ரயில்ல ஏறி உள்ள வந்தவுடனே டக்குனு கீழ தரையில பேப்பரைவிரிச்சோ இல்ல சும்மாவோ உட்கார்ந்துக்குவாங்க அதில் சில பேர் படுத்துக்குவாங்க. இதுக்கும் ஒரு சண்டை நடக்கும் பாருங்க அது அதுக்குமேல இருக்கும்.அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏறவங்களுக்கு படியில தொங்குரதுக்குகூட இடம் இருக்காது.நடைமேடையில் நின்னுகிட்டு கத்துவாங்க "எம்மா எப்ப எந்திரிங்க எல்லாம் படில தொங்கிட்டு வராங்க நீங்க சொகமா படுத்துக்கிட்டும்,உக்கந்துகிட்டும் வரீங்க" என்று ஒரே கூச்சலும் சண்டையும இருக்கும்.இது ஒரு பக்கம் இருக்க காலை மிதிச்சுட்டான் கையை மிதிச்சுட்டான்னு ஒரு சண்டை வேற.ஒரு வழிய கொஞ்ச தூரம் போனவுடன் ஐந்தாமவருக்கு சீட்ல புண்ணியவான் எடம் கொடுத்திடுவாங்க அப்புறம் சண்டை போட்ட ரெண்டு பேரும் நண்பர்களாகி பல விசயங்களை பேசிகிட்டு வருவாங்க.

இதுல மேல ஏறி உட்கருரதுக்கு ஒரு சண்டை "என்ன 3 பேர் தான் உட்கர்ந்திருகீங்க நாலு பேர் உட்காரலமேன்னு" ஒருத்தர் சொல்ல மேல உட்கர்ந்திருகிறவர் "என்னங்க பேசுறீங்க மேல எப்படி நாலு பேர் உட்காரமுடியும்" என்று அது ஒரு தனி வாக்குவாதம் ஓடிக்கொண்டிருக்கும்.லகஜு வெக்கிற எடத்துல ரெண்டு மூணு பேர் படுத்திட்டு இருப்பாங்க அது பொறுக்காதா அதை பார்த்து ஒன்னு ரெண்டு பேர் "ஏங்க அது லகஜு வெக்கிற அதுல படுத்துகிட்டு வந்த நாங்க எங்க கொண்டு போய் வெயகிறது" சொல்லிக்கிட்டு வருவாங்க.

இதுக்கு இடையில எவனாவது ஒருத்தன் கைபேசில FM அல்லது பதிவு செஞ்சு வெச்சிருக்கிற பாட்டை போட்டு விட்டுருவானுங்க.சிலர் கடுப்பாகி "அவனவன் நிக்க முடியாம வரான் ஏன்பா பாட்டை போட்டு உயிரை வாங்குரீங்கனு" சத்தமாகவும் ஒரு சிலர் முனகுவதும் நமக்கு கேட்கத்தான் செய்யும்.பிடிக்கிறதோ பிடிகலையோ வேற வழியில்ல அந்த பாட்டை கேட்டுட்டு தான் வரணும்.இதுல கொஞ்ச பேர் மட்டும் தான் தண்ணீர் வெச்சிருப்பாங்க.தண்ணி வேச்சிருகிரவன் கூட தண்ணிய குடிக்காம வெச்சுகிட்டு வருவான்.பக்கதுல இருக்கிற ஒரு ஆள் "சார் கொஞ்சம் தண்ணி கெடைக்குமா" நு கேட்பார்.இந்தங்கனு கடுப்போட தான் தண்ணிய குடுப்பாங்க. பதிவு செய்திட்டு போற பெட்டிகளில் இதுபோன்ற விசயங்களை பார்க்க முடியாது.எத்தனை வகையான மனிதர்கள் எத்தனை எதிர்பார்ப்புகள்,எத்தனை சண்டைகள் இந்த அனுபவமும் புதுசா இருந்ததுனலையோ என்னவோ எனக்கு அந்த பயணம் புடிச்சிருந்துச்சு..

கல்யாணமாகி எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் எனது ரயில் பயணம் வாரம் இருமுறை என வாடிக்கையாகிப்போனது.வெள்ளிகிழமை சேலம் விரைவு ரயில் எக்மோர்இல் இருந்து சேலம் வரை ராத்திரி 11:00 மணிக்கு புறப்படும் ஆனால் 9:00 மணிக்கெல்லாம் நடைமேடை வந்துவிடும்.அதனால் 9:00 மணிக்கு அங்கு இருந்தால் படுக்க இடம்பிடிச்சிரலாம் நு எல்லா வெள்ளிகிலமைகளிலும் அவசர அவசரமாக போய் படுக்க இடம்பிடிச்சுகுவோம். படுக்கிறதுக்கு இடம் கிடச்சிட அவ்வளவு சந்தோசம் 86 ரூபாய்க்கு ஜாலியா படுத்திட்டு போரேமேன்னு தான் அதுவும் முன்பதிவு இல்லாத பெட்டியில்.அந்த ரயில்ல மேல உட்கார்ந்த தலை இடிக்கும் உட்கார முடியாது அதனால மேல ஏறி படுத்துகிட்டா யாரும் தொந்தரவு பண்ணமாட்டாங்க.அதுவுமில்லாமா இப்படி ஒரு ரயில் இருக்கிறது நெறைய பேருக்கு தெரியாம இருந்துச்சு.அதனலயே எங்களுக்கு வார வாரம் இடம் கிடச்சுகிட்டு இருந்துச்சு.இப்படி ஒரு ரயில் ஒன்னு சேலத்துக்கு இருக்குதுன்னு மக்களுக்கு அதிகமா தெரியாத வரைக்கும் எங்களோட பயணம் முன்பதிவில்லாமலே சுகமானதா தான் இருந்துச்சு.


வெள்ளிகிழமைகளில் சென்ட்ரல்ல இருந்து இப்படி ப்ரீயா போற ரயில் எதையும் நீங்க பார்க்க முடியாது.சேலம் எக்ஸ்பிரஸ் பத்தி அதிகமா தெரிய ஆரம்பிச்சவுடனே மக்கள் அதிகமா அதில் வர ஆரம்பிச்சுடாங்க 8 மணிக்கெல்லாம் 7 அவது நடைமேடைல வந்து உக்காந்துக்க ஆரம்பிச்சுட்டாங்க.எங்க பாடு திண்டாட்டமா போச்சு.இப்படியாக எங்களோட சென்னை - ஈரோடு பயணம் போயிகிட்டு இருந்துச்சு.


ஞாயிற்று கிழமையில் எங்களின் ஈரோடு - சென்னை பயணம் இன்னும் சுவாரசியமானது.நான் தனியாக வரும் போகும் பொழுது கோவை எக்ஸ்ப்ரஸில் தான் சென்னை வருவது வழக்கம் அதுவும் முன்பதிவு செய்யப்படாததே வழக்கம் போல்.நான் நடைமேடைல போய் நிக்கிற எடத்துல சரியாய் ஊனமுற்றோர்கான பெட்டிக்கு அடுத்த சின்ன பெட்டி வந்து நிற்கும் அதுக்கு பின்னாடி ஆயிரம் பெட்டி இருந்தாலும் அதுல தான் ஏறுவேன்.நான் தான் வழபழ சோம்பேறின இருகிறவன் அத்தனை பெரும் என்னை மாதிரியே இருப்பாங்க எல்லாரும் அதே பெட்டில தான் ஏறுவாங்க.அதிலேயும் ஆயிரம் சண்டை சச்சரவு.

அதுக்கப்புறம் இப்பேல்லாம் அல்லேபே - தன்பாத் விரைவு ரயில்ல தான் வர்றது மதியம் 2:00 ஈரோடுக்கு வந்து சேரும் 15 நிமிஷம் சுத்தம் செய்வாங்க 2:15 க்கு புறப்படும்.இது கேரளால இருந்து வடமாநிலம் வரை போறதுனால நெறைய வகை மக்களை பார்க்க முடியும்.கட்டிட வேலை செய்யும் பாக்கு போட்ட வாயுடைய அம்பாளை,பொம்பளை, பசங்க பொண்ணுங்க.கேரளத்து பைங்கிளிகள், சேட்டன், சேட்டதிகள், நம்ம ஊர்ல இருந்து ஒரிசா வரை வெளிக்கு போகும் ஆம்பளைங்க, முஸ்லீம் பொம்பளைங்க, அவங்க குழந்தைங்கநு நெறைய பேர் பார்க்க முடியும்.நான் அதுல முன் பதிவு பண்ணி வந்தாலும் படுத்து தூங்க மாட்டேன்.

பக்கதுல இருக்கிற யாராவது ஒருத்தரோட பேசிகிட்டு இருப்பேன்.அதுமட்டும் இல்லாம குழந்தைகள் பக்கதுல இருந்த அதுங்க கூட விளையாடுறதும் அதுங்களை கொஞ்சிகிட்டும் இருப்பேன்.அதனாலையோ எனவோ குழந்தைங்க என்கிட்ட நல்ல ஒட்டிகுங்க இல்ல என்னை காமெடி பீஸ்நு கண்டுபிடிசிருங்களோ என்னவோ அதுங்களை கேட்டாத்தான் தெரியும்.

எனக்கு ரயில் மூலமா கிடச்ச நண்பர்கள் நிறைய அவங்களோட அப்பபோ இன்னமும் பேசிக்கிட்டு தான் இருக்கேன் பேச முடியாட்டி SMS அவது அனுப்புவேன்.பக்கதுல இருக்கிறவங்க கூட பேசறப்போ அவங்களை பத்தின பல விஷயங்கள் நம்மக்கு தெரிய வரும்.எங்க போறாங்க என்ன பண்றாங்க அப்படி எல்லாத்தையும் தெரிஞ்சுக்குவேன்.அதுல நமக்கு எத்தனையோ அனுபவங்கள் கிடய்க்குது.எனக்கு தெரிஞ்சு ரயில்ல எதை கொண்டு வந்தாலும் அதை வாங்கி முதல்ல சாப்டறது வடமாநிலத்து கட்டிட வேலைசெய்யும் பசங்க அமபளைங்கதான் சுண்டல், சப்போட்ட,கொய்யாப்பழம், சமோசா, மசால் பொறி இப்படி எதையும் விட்டு வைக்கிறது இல்ல இது தவிர பிரியாணி. "என்னடா இது இப்படி சாபிடராங்களே அனா ஆள் ஒள்ளிய இருக்காங்க, இவங்க இதை எல்லாம் பார்த்தது கூட இல்லியா"ன்னு கூட தோணும். ஆனா அவங்களை ஒரு விசயத்துல பாராட்டியே ஆகணும் எனத்தான் அழுக்கு படிஞ்ச தலையும், அழுக்கு ஜீன்சும், பாக்கு போட்ட வாயுமாய் இருந்தாலும் கூட பிச்சைகாரர்களுக்கும், வேறயாரு காசுனு கேட்டாலும் கொடுத்திடுவாங்க.

ஆனா அப்படி பட்டவங்களுக்கு திருநங்கைகள் படுதிற கொடுமை இருக்கே ஒரு சில நேரம் காமெடியா தெரிஞ்சாலும் கூட ஒரு சில நேரம் கஷ்டமா இருக்கும். தமிழ் ஆட்களை விட்டுடுவாங்க வடமாநில ஆட்களை சட்டையை பிடிச்சு காசு கேட்பாங்க இலின செருப்பை எடுத்து காமிப்பாங்க பாவமாய் இருக்கும்.இது போல தான் ஒரு முறை, ஆனால் அது காமெடியா முடிஞ்சிருச்சு. ஒரு திருநங்கை வடமாநில ஆள் ஒருத்தரோட சட்டையை பிடிச்சு "தே ரே தே பைசா நிக்கால் நு" கேட்டு இருந்துச்சு அந்த ஆள் கொடுக்கிற மாதிர சட்டை பையில் கையை விட்டு எடுக்க அதுல இருந்து ஒரு பாயர் அண்ட் லவ்லி வந்துச்சு அதை பார்த்த அந்த திருநங்கை "நீ கெட்ட கேடுக்கு பியர் அண்ட் லவ்லி" யானு கேட்டு ஜன்னல் வழிய தூக்கி எறிஞ்சிட்டு போட்டுச்சு அது பார்த்து எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுடாங்க அந்த வடமாநில ஆள் உட்பட.

இந்த ரயிலிலே ஒரு வசதி உண்டு அது தான் கிரேன்ட் ரிசர்வசன் ஈரோடு சேலம் ல ஏறுரவங்களுக்கு மட்டும் இந்த வசதி உண்டு எக்ஸ்ட்ரா கோச் இருக்கும் அதுல ஏறி எந்த சீட் ல வேணும்னாலும் உட்கந்துக்கலாம் இல்ல படுத்துக்கலாம் அந்த சீட்கள் வடமாநிலம் போரவங்காளுக்கு கொடுக்கப்படும் அதுக்கான ஆள் வரவரைக்கும் நாம அதுல உட்கந்துக்கலாம் அதுதான் அந்த கரண்ட் ரிசர்வசன் சீட்.அதுலயும் பல காமெடிகள் நடக்கும்.அப்படி தான் ஒரு முறை நான் பயணித்த பேட்டியில் ஒரு வெள்ளயன்(foreigner) வந்திருந்தார் அவரை நான் பார்த்துகிட்டே இருந்தேன் அவர் என்னை பார்த்து "ஹலோ" நு சொன்னார் நானும் பதிலுக்கு "ஹாய்" சொன்னேன்.

அவர் பக்கத்துக்கு காபின்ல போய் அப்பர் பெர்த்ல படுத்துகிட்டார். ஒரு அரை மணி நேரம் இருக்கும் ஒரு சேட் வந்து "அது என்னோட சீட்" நு ஆங்கிலத்துல சொல்ல அவர் எதிர்ல இருக்கும் அப்பர் பெர்த்ல மாறி படுத்துகிட்டார். ஒரு அரை மணி நேரம் இருக்கும் இன்னொருத்தார் வந்து அது அவரோடதுன்னு சொல்ல கடுபாகி போன அந்த வெள்ளையர் நான் உக்கார்ந்திருக்கிற சீட் எதிர் புறமா இருந்த அப்பர் பெர்த்ல படுத்துகிட்டார்.ஒரு பெரிய லகஜு ஒரு புத்தகம் வெச்சிருந்தார் அதை படுத்துகிட்டே படிச்சுட்டு வந்தார் ஒரு ஒரு மணி நேர பயணம் அவருக்கு எந்த தொந்தரவும் இல்லாம இருந்துச்சு. ஒரு நிறுத்தத்துல ஏறின ரெண்டு பேர் அவருடைய எடத்துக்கு வந்தாங்க அவங்க ரெண்டு பெரும் வடமாநிலத்தவங்க அவரை பார்த்து "எ ஹமாரா சீட் ஹே" என சொல்ல வெள்ளையர் திருதிருநு முழிச்சுகிட்டு எங்களை பார்த்தார். அவருக்கு அவங்க சொல்றது என்னனு புரியல திரும்பவும் படுத்துகிட்டார்.இந்த ரெண்டு பேருக்கும் என்ன சொல்றதுனே தெரியல இவங்க நினுகிடே இருக்கிறதை பார்த்து அந்த வெள்ளையர் கேட்டார் "வாட் டூ யு வான்ட் ?" இப்போ இவங்க ரெண்டு பெரும் திருதிருநு முழிச்சாங்க. அந்த வெள்ளையர் புரிஞ்சுகிட்டு சிரிச்சுகிட்டே "இஸ் திஸ் யுவர் சீட்" என கேட்டார் அதுக்கும் அவங்ககிட்ட இருந்து பதில் இல்ல. அதை பார்க்க ஒரே காமடியா இருந்துச்சு.அப்புறம் நான் வெள்ளையரிடம் விலக்கினேன் ஒரு வழிய அவரே புரிஞ்சுகிட்டு லகஜுஐ எடுத்துகிட்டு சிரிச்சுகிட்டே கிளம்பிட்டார். இதுகிடயில "துஜ்ஹி தேஹ்க தொ எ ஜான சனம்" பாட்டு பாடிகிட்டு ஒரு பொண்ணு, ஒரு பையன் காசு கேட்டு வந்தாங்க. அதுக்கப்புறம் அவரை சென்னை வந்து இறங்குற வரைக்கும் பார்க்க முடியல.

இப்படி பல சுவாரசியங்களும்,நகைச்சுவை சம்பவங்களும் நடக்கும் இடம் தான் ரயில். இப்படி என்னோட பயணம் வார வாரம் தொடந்து கிட்டு இருக்கு. அதே சப்போட்டா விக்குற பொம்பள, பட்டாணி விக்குற பொம்பள, கொய்யாப்பழம் விக்குற பொம்பள, டி சப்லியர், தரையை சுத்தம் செய்யும் காசு கேட்கும் உணமுற்ற பையன், பாட்டு பாடும் பையனும் பொண்ணும் என எல்லாரையும் டிவி ல வரும் வாரம் ஒரு முறை தொடர் மாதிரி வார வரம் பார்த்துகிட்டே எனது பயணம் தொடர்கிறது.ரயில் பயணத்தொட அனுபவத்தை சொல்லனும்னா சொல்லிகிட்டேபோலாம் அதுக்கு எல்லையே கிடையாது.இப்படியான ஒரு சுவாரசியமான பயணம் பஸ்லயோ, பிளைட்லையோ நீங்க பார்க்கவும் முடியாது,அனுபவிக்கவும் முடியாது.

என்னுடைய இந்த பயணம் எப்போ முடியும் எனக்கே தெரியாது ஆனா முடிய குடதுன்றது தான் என்னோட ஆசை...

9 comments:

LK said...

நலல் விவரிப்பு. இதே அனுபவன் காதிர்ப்பு பட்டியலில் இருக்கும் டிக்கட்டை வைத்துக் கொண்டு ரிசர்வ் பெட்டியில் பயணம் செய்யும் பொழுதும் ஏற்படும். சமீபத்தில் டெல்லி சென்றபொழுது மிக அருமையாக அனுபவித்தேன்

rajeshkannan said...

நன்றி ... ஒ அப்படியா ... ரயில் பயணத்தின் அனுபவமானது பறந்து
விரிந்திருக்கும் வானைப்போன்றது

ILA(@)இளா said...

நடய பார்த்தாவே தெரிஞ்சுது.. நம்மூராளாத்தான் இருக்கனும்னு. நல்ல இருந்துச்சுங்க பதிவு. கொஞ்சம் வெளக்கமாவும், பெருசாவும் போயிருச்சு. :)

ஜாக்கி சேகர் said...

நல்லா இருந்திச்சி.. ஆனா இளா சொன்னது போல ரொம்ப பெரிச இருந்திச்சு...

rajeshkannan said...

ரொம்ப நன்றி இளா, ஜாக்கி அண்ணா.நான் எழுதுனமுனு நெனச்சது
சின்னதா தான்.எழுத எழுத வந்துகிட்டே இருந்துச்சு.அதோட போக்குலயே விட்டேன் :-) :-)

கமலேஷ் said...

மிகவும் அழகான பகிர்வு தோழரே...பயணங்கள் விரியட்டும்...வாழ்த்துக்கள்...

rajeshkannan said...

நன்றி கமலேஷ்

CINEMA GALLARY said...

ஸ்ருதி ஹாசன் ஹாட் - Sruthi Hasan Hot http://cinema-gallary.blogspot.com/2010/05/sruthi-hasan-hot.html

குணசேகரன்... said...

why u didnt publish ur recent posts..are u busy?share ur post to all...